சுரேஷ் சலே விவகாரத்தில் கம்பன்பிலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாகவும், மதங்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர், கடந்த காலங்களில் ஊடக மாநாடுகளில் வெளியிட்ட கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊடக மாநாடுகளின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளை 10 ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்
முறைப்பாட்டாளரான அருட்தந்தை ரோகன் சில்வா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் டி பெரேரா, உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துகள் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு பதிவு செய்து, விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |