கணேமுல்ல சஞ்சீவ படுகொலையை முன்பே அறிந்திருந்த காவல்துறை! வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாகவே அவரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
படுகொலை முயற்சி
எனினும், அவர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்படுவார் என தகவல் கிடைக்கவில்லை என்றும் கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் மாத்திரமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை அங்கு முன்னிலைப்படுத்தவில்லை என்றும் பதில் காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார்.
காரணம்
அதனை தொடர்ந்து, தகவல் கிடைத்தவுடன், கம்பஹா பிரிவு பொறுப்பதிகாரியிடம், நீதிபதிக்கு தகவல் தெரிவிக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்யவும், மெய்நிகர் முறையில் சாட்சியங்களை வழங்க அனுமதிக்க பேசியதாகவும் அன்றையதினம் சஞ்சீவ நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
