பிரதமர் மீது பாலின அடிப்படையிலான தாக்குதல் - ரஜீவன் எம்.பி கடும் சீற்றம்
பிரதமர் மீது நடத்தப்படும் தனிநபர் மற்றும் பாலின அடிப்படையிலான தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசாங்கம் அண்மையில் இடம்பெற்ற தரம் 06 பாடப்புத்தகத்தில் ஒரு தவறு குறித்து பொறுப்புடன் ஒப்புக்கொண்டு, அதனை விசாரிக்க காவல்துறை விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
அரசியல் விமர்சனம்
இது ஒரு பொறுப்புள்ள ஆட்சியின் அடையாளமாகும். அந்த வகையில் இந்த நடவடிக்கையை ஒரு நேர்மறையான முன்னேற்றமாகவே நான் பார்க்கிறேன்.

அதே நேரத்தில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மீது தனிநபர் ரீதியாகவும், அவமதிப்பான மொழிகளிலும், குறிப்பாக அவரது பாலினம் மற்றும் தனிப்பட்ட அடையாளத்தை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
அரசியல் விமர்சனம் என்பது அரசின் கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாக இருக்க வேண்டும்.
தனிநபர்களை இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது மரியாதையைச் சிதைக்கும் வகையிலான தாக்குதல்கள் ஜனநாயக அரசியல் பண்பாட்டிற்கே எதிரானவை. எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இவ்வாறான தாக்குதல்களை தங்களின் முக்கிய அரசியல் நோக்கமாக மாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது.
அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி
குறிப்பாக, பிரதமரை அவமதிக்கும் வகையில், அவரது பாலியல் அடையாளம் தொடர்பாக பொய்யான, கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

இத்தகைய அரசியல் கலாச்சாரத்தை நான் முற்றாக நிராகரிக்கிறேன்; அதனைத் தீவிரமாகக் கண்டிக்கிறேன். பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அவர் ஒரு பெண் என்பதற்காகவோ, அல்லது அவரது தனிப்பட்ட அடையாளங்களைப் பற்றி ஊகங்கள் உருவாக்குவதற்காகவோ அவமதிக்கப்படக் கூடாது.
நாங்கள் எப்போதும் மரியாதை, சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் நாகரிக அரசியல் பண்பாட்டிற்காக உறுதியாக நிற்போம். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால் அவை மரியாதையுடனும், பொறுப்புடனும் வெளிப்படுத்தப்பட வேண்டும். நபர்தாக்குதல்களும், வெறுப்புப் பேச்சும் எந்தவொரு அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்