சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு! புத்தாண்டை முன்னிட்டு நடவடிக்கை
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் (13) 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் குறித்த தரப்பினர் நாளை காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 896 ஆண் கைதிகளும் 21 பெண் கைதிகளும் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தரப்பினரே இவ்வாறாக விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 34 ஆம் பிரிவுக்கமைய அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி குறித்த தரப்பினருக்கு பொது மன்னப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசேட சந்தர்ப்பம்
அத்துடன், புத்தாண்டு காலத்தில் சிறைக் கைதிகளைப் பார்வையிட குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பங்களும் வழங்கப்படவுள்ளதாக காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பார்வையிட வரும் நபர் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புப் பண்டங்கள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு வழங்குவதற்கு அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |