நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து இலங்கையில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்களிள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளினதும் தொழிற்சங்கங்கங்கள் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் மேலும் பல தொழிற்சங்கள் பணி விலகல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.
தொழிற்சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதன் பின்னர், பணி விலகல் ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டிருந்தாலும், குறித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை முன்வைத்தும் போலி வாக்குறுதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்
இதன்படி, ஆசிரியர்களுக்கான சம்பளம், பதவி உயர்வு, ஏனைய சலுகைகள் மற்றும் பாடசாலை பொருட்களுக்கான கட்டணங்களை குறைப்பதன் மூலம் பெற்றோருக்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வித்துறை சார் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையில் தற்போது பாரிய பிரச்சனையாக கருதப்படும் சம்பள மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம கூறியுள்ளார்.
கிராம சேவகர்களின் நியமனம் தொடர்பில் நீண்ட காலம் நீடிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கையின் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
போலி வாக்குறுதிகள்
அத்துடன், போக்குவரத்து சபையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென எழுத்து மூலம் உறுதி வழங்கப்பட்டாலும் அது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அகில இலங்கை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நீடித்து வரும் போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கான சம்பளப்பிரச்சினையை அரசாங்கமும் பொறுப்பதிகாரிகளும் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், புத்தாண்டு காலத்திலாவது தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்கப்பட வேண்டுமெனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எச்சரித்ததாக சேபால லியனகே மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |