பொருளாதார மீட்பு நிலையில் வட்டி விகிதத்தில் மாற்றம்: இலங்கை குறித்து விசேட ஆய்வு
சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கும் முக்கியமான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி திட்டத்தின் ஆறாவது தவணையை ஆய்வு செய்யும் நிலையில், இலங்கை மத்திய வங்கி (CBSL) நாளை (புதன்கிழமை) தனது முக்கிய வட்டி விகிதத்தை 7.75% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பின் படி, குறித்த எதிர்வுகூறல் வெளியாகியுள்ளது.
பன்னிரண்டு பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த கருத்துக்கணிப்பில், நிலையான பணவீக்கம், ஆரோக்கியமான கடன் வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு, அனைவரும் ஒருமனதாக கொள்கை வட்டியில் மாற்றம் இருக்காது என கணித்துள்ளனர்.
டொலர் பற்றாக்குறை
2022 ஆம் ஆண்டு கடுமையான டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை நிலைநிறுத்தியே வைத்துள்ளது.
எனினும், கடந்த நவம்பர் இறுதியில் தாக்கிய டிட்வா (Ditwah) புயல் காரணமாக இலங்கையின் மெதுவான மீட்பு பாதிக்கப்பட்டது. அந்தப் புயலில் 649 பேர் உயிரிழந்ததுடன், 2.2 கோடி மக்கள் தொகையில் சுமார் 10% பேர் பாதிக்கப்பட்டனர்.
வீடுகள், சாலைகள் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் உலக வங்கி கணிப்பின்படி 4.1 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம், IMF இலங்கையின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை 3.1% இலிருந்து 2.9% ஆகக் குறைத்ததுடன், பணவீக்கம் 5.4% ஆக உயரும் என எச்சரித்துள்ளது.
5% கணிப்பு
இது மத்திய வங்கியின் 5% என்ற கணிப்பை விட சற்று அதிகமாகும். 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பணவீக்கம் 2.1% ஆக இருந்தது. மேலும், உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியையும் IMF அனுமதித்துள்ளது.
IMF குழு தனது தகவல் சேகரிப்பு பயணத்தை புதன்கிழமை முடிக்க உள்ளது. இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 4%–5% ஆக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
புயலுக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்கான அதிகரித்த அரச செலவினம் இதற்கு ஓரளவு ஆதரவாக இருக்கும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கடந்த மாதம் நாடாளுமன்றம் கூடுதல் 500 பில்லியன் ரூபாய் செலவினத்தையும் அனுமதித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |