நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு
புதிய இணைப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சியிலும் (Kilinochchi) சுமுகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.
கிளிநொச்சி காவல்துறையினர் தங்களது தபால் மூல வாக்குகளை கிளிநொச்சி மாவட்ட செயலகம், தலைமையக காவல் நிலையம் மற்றும் பிரதேச காவல் நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 3,656 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 96 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் வாக்களிப்பு செயற்பாடு
இதேவேளை 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமானது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பானது இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும்.
மூன்றாம் இணைப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு வவுனியா மாவட்டத்திலும் சுமுகமாக இடம்பெற்றுவருகிறது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், காவல்துறையினர், தேர்தல்அலுவலக உத்தியோகத்தர்கள் இன்றையதினம் தமக்கான தபால் வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று காலை 8.30 மணி முதல் வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் குறித்த தரப்பினர் தமது வாக்கினை செலுத்திவருகின்றனர்.
தபால் மூல வாக்களிப்பு
அத்துடன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 14,060 பேரின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5,942 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4,171பேரும், முல்லைத்தீவில் 3,497 பேரின் தபால் மூல வாக்கு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை மூதூர் காவல் நிலையத்தில் இன்று (30) காலை 7.30 மணிக்கு மூல தபால் வாக்களிப்பு இடம்பெற்றது.
மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் கண்காணிப்பின் கீழ் இவ் வாக்களிப்பு இடம்பெற்றதோடு மூதூர் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (30) தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான காவல் நிலையம், நட்டாங்கண்டல், ஜயன்கன்குளம், மல்லாவி , மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கொக்கிளாய் , வெலிஓயா ஆகிய காவல் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், காவல்துறை பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கு மேலதிகமாக, நவம்பர் 4 ஆம் திகதியும் குறித்த அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் உத்தியோகத்தர்கள்
பயன்படுத்தப்பட்ட தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகளை இன்று முதல் ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.
இவ்வருட பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஏறக்குறைய ஆயிரம் உத்தியோகத்தர்களை பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |