தமிழ் மக்கள் தெளிவாக முடிவெடுக்க வேண்டிய தருணமிது : தமிழரசு கட்சி வேட்பாளர் அறிவிப்பு
தமிழ் தேசியத்தையும் அபிவிருத்தியையும் இரு சக்கரங்களாகக் கொண்ட இரதம் பயணிப்பது போன்று எமது பயணம் அமையும். என்பதை மிக உறுதியாக நான் கூறிக் கொள்கின்றேன். ஆகவே மக்கள் தெளிவாக முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்திருக்கின்றது. இவ்வாறு எதிரவரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் கோவில்போரதீவில் சனிக்கிழமை(02.11.2024) மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கைகளை எவ்வாறு நாம் இந்த தேர்தலில் பயன்படுத்திக் கொள்வது, யாருக்கு வாக்களிக்க வேண்டும், என்பது தொடர்பில் எமது மக்கள் சிந்திக்கின்ற தருணம் இது. தமிழ் தேசியத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுடன் பயணித்துக் கொண்டிருக்கின்ற தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி சோரம் போகாத அரசியல் மூலம் தமிழ் தேசியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி எதையும் செய்யமாட்டார்
ஆனால் புதிதாக வந்திருக்கின்ற ஜனாதிபதி என்ன செய்கின்றார், என்ன செய்யப் போகின்றார், என்பது மிக முக்கியமான விடையம். ஜே.வி.பி கட்சியின் ஒரு அங்கமாக இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடாக வந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களிலே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனரா? இல்லை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வடக்கு கிழக்கை பிரித்தெடுத்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் அவர்கள் சம்பந்தமாக மனிதாபிமான அடிப்படையில்கூட ஜனாதிபதி இதுவரையில் கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் வாக்கு நம்பி இருக்கின்ற ஜனாதிபதியால் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யக்கூடிய நிலையில் அவர் இல்லை, செய்யப் போவதுமில்லை.
யாருக்கு வாக்களிக்கக்கூடாது
ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த தென்னிலங்கை தேசிய கட்சிகளில் எவர் இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்பதை நாங்கள் நிராகரிக்க வேண்டும். அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது ஆகவே மக்கள் மிகத் தெளிவாக யாருக்கு வாக்களிக்கக்கூடாது, என்பதை கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் என்ன செய்தார்கள் எங்களுடைய பிரதேச நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. எமது வளங்கள் சூறையாடப்படுகின்ற பொழுதும் அவர்களால் அதற்காக குரல் கொடுத்திருக்க முடியவில்லை. அவர்கள் அதை பார்த்துக்கொண்டு அபிவிருத்தி என்ற விடயத்தை மட்டும் கூறிக்கொண்டு அரசியல் சோரம் போனவர்களாக இருந்தார்கள்.
ஆகவே இம்முறை இவ்வாறான கூச்சல்களுக்கு, நாங்கள் அடிபணியக் கூடாது. அரசாங்கத்துடன் பயணிக்க முடியாத அளவு ஊழல்கள் உள்ளவர்களாகவும், வன்முறை உள்ளவர்களாகவும், இருக்கின்றார்கள். தற்போது சிறு சிறு கட்சிகளும் இருக்கின்றன. அடிப்படையிலே தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக அதனை நடாத்துகின்றனர். இதனால்; மக்களின் வாக்குகளை வீணடிப்பார்கள். ஆகவே மிகத் தெளிவாக இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் உறுதியாக தமிழ் மக்களின் குரலுக்காக தமிழ் தேசியத்திற்காக தந்தை செல்வாவின் கொள்கையில் பயணிக்கின்ற தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை திடமான நம்பிக்கையையும் உறுதியை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பேரம் பேசும் பலத்தை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீதத்தை அதிகரித்து மத்திய அரசுடன் பேரம் பேசும் பலத்தை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணிக்கை அதிகரிக்கின்ற பொழுது எங்களுடைய தமிழ் தேசியத்தை விட்டுக் கொடுக்காது தமிழ் உரிமைகளை விட்டுக் கொடுக்காது தமிழ் மொழியின் நிலையை புரம்போடுவதற்கும் பேரம் பேசும் வல்லமை உடைய தமிழக கட்சிக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையான எண்ண கருவை நாம் கொள்ள வேண்டும்.
எமது பிரதேசத்தினை வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையிலும், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய வகையில், கல்வியைக் கட்டமைக்கக் கூடிய வகையிலும் அபிவிருத்தி செய்யக்கூடிய வகையிலும் எமது திட்டம் மிகச் சிறப்பாக அமையும். தமிழ் தேசியத்தையும் அபிவிருத்தியையும் இரு சக்கரங்களாகக் கொண்ட இரதம் பயணிப்பது போன்று எமது பயணம் அமையும். என்பதை மிக உறுதியாக நான் கூறிக் கொள்கின்றேன்.
சமகால அரசியல் சூழ்நிலையின் மத்தியில் எவ்வாறு ஆட்சி அமையப்போகின்றது தமிழ் மக்களின் பாத்திரமான பங்கு நாங்கள் மிக நுட்பமான முறையில் எவ்வாறு அதை கையாளுவது யார் மூலம் கையாளுவது என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்பு மக்களின் கைகளில் இருக்கின்றது.
தமிழ் தேசியத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்கவில்லை
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது. ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அரசியல் சூழ்நிலை மாறுகின்றது. ஆனாலும் தமிழரசு கட்சி தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கின்றது. தமிழ் தேசியத்தை நாங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுக்கவில்லை கடந்த கால யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களிலும் அவை இருக்கின்றன. அதற்கான கட்டுமானத்தை நாங்கள் விஸ்தரிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதை பாரியளவில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட மன காயம் இப்போதும் இருக்கின்றது. ஒரு வீட்டில் யாராவது இறந்திருப்பார்கள். இந்நிலையில் அரசாங்கத்துடன் பேரம் பேசி எமது மக்களுக்கான விடியலை கொண்டு வருவதில் எமது கட்சி மிக உறுதியாக இருக்கின்றது. அதற்காக மக்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்துகின்றோம். ஆகவே மிகத் தெளிவாக நான் கூறுவது, மிக மிக நுட்பமாக முடிவெடுத்து, சரியானவர்களை சரியான தேர்வுகள் மூலம், நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |