கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் !
ஈழ விடுதலைப் போராட்டத்திலும் இனப்படுகொலை வரலாற்றிலும் யாழ்ப்பாண (Jaffna) பல்கலைக்கழகம் வடபுலத்தில் பல அவலங்களின் சாட்சியாக இருக்கிறது.
அதைப்போலவே ஈழத்தின் கிழக்கில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகமும் இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கிறது.
இனப்படுகொலையின் குருதியில் நனைந்த நமது நாட்காட்டியில் செப்டம்பர் 5 ஆம் நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகப் படுகொலையின் நினைவேந்தல் நாளாகும் ஒருவரல்ல இருவரல்ல நூற்றி ஐம்பத்தியெட்டு அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த நாள் ஈழ வரலாற்றில் ஒரு ஆறாத ரணமாகப் பதிந்துவிட்டது.
தஞ்சமடைந்த அப்பாவிகள்
செப்டம்பர் 5 ஆம் திகதி 1990 ஆம் ஆண்டு அன்றைய நாள் போர் சூழலின் பதற்றம் மிகுந்த பொழுதுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள்.
அப்படி கைது செய்யப்பட்ட மக்கள் இலங்கை இராணுவத்தின் கொடூரப் படுகொலைகளினால் அழிக்கப்பட்டனர். கிழக்குப் பல்கலைக்கழத்தின் நிலத்தில் அந்தக் குருதி இன்னமும் காயாமல் இருப்பதைப் போலவே வலிமையான தாக்கம் நீள்கிறது.
1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.
வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி மற்றும் கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
குருதியில் நனைந்த வெள்ளைக்கொடி
போர்ச் சூழலில் தம்மை பாதுகாக்க ஏற்றப்பட்ட வெள்ளைக் கொடியில் குருதி நனையும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை பல்கலைக்கழக வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர்.
பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்ததுடன் முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.
பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர் இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர் ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிஷ்ணர் (K. Balakishnar) தலைமையில் மூன்று பேரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.
சாட்சியங்கள் சொல்லிய செய்தி
எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின (L.W.R Vidhyaratna), கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் (W.N Wilson) ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர் அத்தோடு இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
83 பேர் சாட்சியமளித்தனர் இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர் அத்தோடு இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.
குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆண்டுதோறும் நினைவேந்தல்
158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினமும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப் படுகொலையின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமும் இந்த நிகழ்வை இணைந்து முன்னெடுத்தன இவ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது இன்றைய நினைவேந்தலிலும் வலியுறுதப்பட்டது.
தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 34 வருடங்கள் கடந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.
இதையெல்லாம் மறைத்து மறந்ததுபோல நடித்து ஆட்சிபுரிகின்ற அரசு தாம் இழைத்த கொடுமைகளின் அநீதியை அறிகின்ற நாட்களில்தான் சிறிலங்காவுக்கு (Sri Lanka) மெய்யான அமைதியும் நிம்மதியும் சாத்தியமாகும் என்பது புலனாகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 September, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.