இலங்கைக்கு பேரிடி -நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ஜேர்மன் நிறுவனங்கள்
இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள்,நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என சில எச்சரிக்கையுடன் சிவப்புக் கொடி உயர்த்தியுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை அரசாங்கம் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது,
இறக்குமதித் தடை குறித்து கவலை

சில ஜேர்மன் நிறுவனங்கள் இறக்குமதித் தடை குறித்து கவலை தெரிவித்துள்ளன. மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர் கூறினார்.
பல ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதுடன் வாகன உதிரிப்பாகங்கள் உட்பட ஜேர்மன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.
செயற்பாடுகளை குறைத்த ஜப்பான் நிறுவனங்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான Mitsubishi மற்றும் Taisei ஆகியவை இலங்கையில் தமது செயற்பாடுகளை குறைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தன.
இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜேர்மனியும் இலங்கைக்கான கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம் என்று ஜேர்மன் தூதுவர் கூறினார்.
ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த வணிகச் சூழல் குறித்தும் கவலைகள் இருப்பதாக Seubert கூறினார்.
இது தொடர்பான கலந்துரையாடல் முதலீட்டுச் சபை உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளுடன் நடத்தப்பட்டுள்ளது