இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி
புதிய இணைப்பு
பிரித்தானிய பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் விச வாயுவை சுவாசித்தமை என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி, முஹந்திராம் சாலையில் அமைந்துள்ள தங்குமிடத்தில் 30 வயதுடைய ஜெர்மன் நாட்டவர் ஒருவர், 27 வயதுடைய ஜெர்மன் பெண் ஒருவர் மற்றும் 24 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவர் தங்கியிருந்தனர்.
கவலைகிடமான ஜெர்மன் தம்பதி
மூன்று வெளிநாட்டினருக்கும் வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, ஜெர்மன் தம்பதியினர் நேற்று (01) காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்று மாலை 7.30 மணியளவில், 24 வயதுடைய ஆங்கிலேயப் பெண் ஒருவர் உடல்நிலை மோசமடைந்ததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெர்மன் தம்பதியினரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மூன்று வெளிநாட்டினரும் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள மற்றுமொரு அறையில், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் பஸ்பைன் என்ற வாயுவைப் பயன்படுத்தி மூன்று நாட்களுக்கு புகைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 24 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் உடல் தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்திருந்த வெளிநாட்டு பெண்ணொருவர் திடீரென உயரிழந்துள்ளார்.
பிரித்தானிய (UK) நாட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் குறித்த பெண் உட்பட ஜேர்மன் நாட்டை சேர்ந்த தம்பதி என மூவர் தங்கியுள்ளனர்.
திடீர் சுகயீனம்
குறித்த மூவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |