அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நான்கு வயது சிறுமி! 18 நாள்களின் பின்னர் உயிருடன் மீட்பு
சிறுமி மாயமாகி 18 நாள்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா - கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் (Cleo Sumit) (வயது 4) என்ற சிறுமி கடந்த மாதம் 16ஆம் திகதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போயிருந்தார்.
இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) பரிசுத் தொகையை வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த வீட்டை காவல்துறையினர் உடைத்தபோது அங்கு ஒரு அறையில் அந்த குறித்தசிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அந்த சிறுமியை காவல்துறை அதிகாரி ஒருவர் சிறுயைத் தூக்கி, ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘‘கிளியோ’’ (Cleo) என்றாள்.
அதைத்தொடர்ந்து அந்தச் சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு, அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சிறுமி கிளியோ மீட்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து ருவிட்டர் தளத்தில் ‘‘அற்புதம், நிம்மதி அளிக்கும் செய்தி’’ பதிவிட்டுள்ளார்.