ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு:உறுதியான பதிலை வழங்காத ஜனாதிபதி செயலாளர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பில் உள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் குறைபாட்டைச் சரிசெய்யுமாறு கோரி, பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பேரணியாகச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இது குறித்து ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிடம் வினவியபோது, அவரால் உறுதியான பதிலை வழங்க முடியவில்லை.
'விடுதலைக்கான பாதயாத்திரை' (Nidhase Paada Yaathraa) என்ற பெயரில் கொழும்புக்கு வருகை தந்த மகா சங்கத்தினர், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பில் உள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் குறைபாட்டைச் சரிசெய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
காலக்கெடுவை விதித்த பிக்குகள்
ஜனாதிபதி செயலாளர் இது குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதை அறிந்திருந்த பிக்குகள், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான காலக்கெடுவை வழங்குமாறும் வலியுறுத்தினர்.

இருப்பினும், தற்போதைய நிலையில் தம்மால் உறுதியான பதிலை வழங்க முடியாது என்று கலாநிதி குமநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலாளர் ஆரம்பத்தில் தங்களைச் சந்தித்து உரையாட முன்வராததால், பிக்குகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, மகா சங்கத்தினர் முன்னெடுத்த இந்தப் பேரணி,இன்று மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது.
image credit -daily mirror
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









