சம்மாந்துறையில் ஆட்டுப்பண்ணைக்குத் தீவைப்பு : இரண்டு ஆடுகள் கருகி பலி
அம்பாறை, சம்மாந்துறை காவல் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் நேற்று (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில், பண்ணை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் இரண்டு ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
தீக்கிரையான பண்ணை மற்றும் உயிரிழந்த ஆடுகளின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் கடின உழைப்பினால் இவ்வாட்டுப்பண்ணையை உரிமையாளர் பராமரித்து வந்த நிலையில், இச்சம்பவம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதேசவாசிகளின் கோரிக்கை
இத்தகைய செயலுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பண்ணை உரிமையாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் விரைந்து சென்று நிலைமையைப் பார்வையிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில