சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்! பதவியை விட்டு விலகுவதாக பகிரங்க அறிவிப்பு
தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இலஞ்சக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
மேலும் ரஞ்சித் பண்டார கூறியுள்ளதாவது, தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாகவும் தாம் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் தனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்த ரஞ்சித் பண்டார, சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாகவும், குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது சிறப்புரிமைகளை மீறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |