டுபாய் வழங்கும் கோல்டன் விசா... படையெடுக்கும் ஐரோப்பியர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா திட்டத்திற்கு ஐரோப்பிய தொழிலதிபர்கள் அதிகம் முன்னுரிமை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் 10 ஆண்டுகளுக்கான வதிவிட உரிமத்திற்காகவே பல ஐரோப்பிய முதலீட்டாளர்களும் டுபாய் மாகாணத்தில் சொத்துக்களை வாங்குவதற்கு முண்டியடிப்பதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் பலர் ஐக்கிய அமீரகம் வழங்கும் வரியில்லா வருமானம், பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் ஆகியவற்றில் பயனடைய விரும்புகின்றனர்.
வங்கிக்கணக்கும் தொடங்கலாம்
தவிரவும் அங்கு முதலீடு செய்வதிலிருந்து கிடைக்கும் அதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இவற்றிற்கெல்லாம் கோல்டன் விசா வழிசமைத்துக் கொடுப்பதனால் அதனை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த கோல்டன் விசா திட்டத்தால் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துவர முடியும், என்பது மாத்திரமன்றி தொழில் விசா எதுவுமின்றி, ஊழியர்களையும் உதவிக்கு அமர்த்தலாம் என கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி, இது சுற்றுலா விசா போன்றல்லாமல், அதிக நாட்கள் ஐக்கிய அமீரகத்திலே தங்குவது மாத்திரமல்லாமல், உள்ளூர் மக்கள் போன்று கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் வங்கிக்கணக்கும் தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.
இதனால் ஐக்கிய அமீரகம் அறிமுகம் செய்துள்ள இந்த கோல்டன் விசா திட்டமானது தற்போது உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், திறன்படைத்த மாணவர்கள் ஆகியோருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
பிரான்ஸ் புதிய வரி
அதனால் அதனை பெறுவதில் அனைவரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வழங்கப்பட்ட கோல்டன் விசாக்களின் எண்ணிக்கை என்பது முந்தைய ஆண்டின் (2022) இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 52 சதவீதம் அதிகரிப்பை காண்பிக்கின்றது, அதில் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
பொதுவாக சுற்றுலா விசா திட்டத்தில், ஒருவர் 6 மாதத்திற்கு ஒருமுறை நாட்டைவிட்டு வெளியேறி, உரிய விசா பெற்று பின்னர் திரும்ப வேண்டும் என்ற முறை காணப்படுகிறது, ஆனால் இந்த கோல்டன் விசா திட்டமானது காலவரம்பின்றி தங்கவும் தொழில்வாய்ப்புக்களை பெறவும், முதலீடுகளை செய்யவும் அனுமதிக்கிறது.
இதற்கிடையே பிரான்ஸ் புதிய வரி திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையிலான பிரான்ஸ் மக்கள் ஐக்கிய அமீரகத்தில் குடியேற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே சூழல் பல ஐரோப்பிய நாடுகளில் உருவாகியுள்ளதாகவும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களே டுபாயின் குடியிருப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |