பாரதூரமான பினவிளைவை ஏற்படுத்தும் - கோட்டா - மகிந்த அரசு தொடர்பில் வெளியான கடும் விமர்சனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் கடந்த அரசாங்கம் செய்த அதே தவறை, கொரோனா தொற்று விடயத்தில் தற்போதைய கோட்டா - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் செய்கின்றது என கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தென்னிலங்கையின் மனித உரிமை ஆர்வலரான அருட்தந்தை ரொஹான் சில்வா, நாட்டை முடக்குமாறு விடுக்கும் கோரிக்கையை அரசாங்கம் கிடப்பில் போட்டு வருவது மிகவும் பாரதூரமான பின்விளைவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் தாக்குதலை நடத்தக்கூடியவர்களின் பெயர் விபரங்கள் என அனைத்துத் தகவல்களும் உளவுப் பிரிவுகளால் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அளிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுமோ என்று அதிகாரிகள் தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகின.
ஆகவே மக்கள் மீது அரசாங்கத்திற்கு இருந்த அக்கறையின்மை இங்கு புலப்படுகிறது. உளவுத்தகவல் கிடைத்தும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காமையின் பிரதிபலனை நாம் கண்டோம். இழப்புக்கான நீதியை இன்றும் மக்கள் கேட்டுவருகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்சமயம் பேராசிரியர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் கொவிட் மரணங்களை நடக்கவிடாமல் உடனடி தீர்மானத்தை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதனை கவனத்திற்கெடுக்காமல் செயற்படுகின்றது. அதன் பிரதிபலனாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட மரணத்தை விடவும் மேலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் அச்சம் உள்ளது.
அதுவே எமக்கு வேதனை அளிக்கின்றது. ஆட்சியாளர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதில்லை என்பதால் நாடு இன்று ஆபத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.மக்கள் இன்று கிளர்ந்தெழும்ப வேண்டும்.
அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையான செயற்பாட்டினைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.'