வெளியே முற்றுகை!! உள்ளே கோட்டாபய - பொறிஸ் ஜோன்சன் கைலாகு : நடந்தது என்ன?
புலம்பெயர் தமிழ் மக்களின் முற்றுகையில் இருந்து வெளியேறி மாநாட்டு அரங்குக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) ஆகியோர் கைகளை குலுக்குவதற்கு பதிலாக, முழங்கையால் மோதி வரவேற்றுள்ளனர்.
பிரித்தானிய வாழ் ஈழத்தமிழ் மக்கள் மாநாட்டு அரங்குக்கு வெளியே கடுமையாக போராடிய நிலையில், பிரித்தானியப் பிரதமர் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கபடும் கோட்டாபாயவுக்கு வரவேற்பு வழங்கியமை குறித்து புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் “கோட்டாபயவின் கரங்களில் இரத்தக் கறை இருப்பதால் கைகளை குலுக்காமல் முழங்கையை மோதியதை ஒருவிதத்தில் நல்லதென” தமிழ் ஆர்வலர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவுடன் கைகுலுக்க அப்போதைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் மறுத்திருந்தார்.
அத்துடன் ராஜபக்ச சகோதரர்களுடனான சந்திப்பை அவர் தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற மோசமான வெளிநாட்டுச் சந்திப்புகளில் ஒன்றாக விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.