மக்கள் ஆணையை பாதுகாக்க தவறிய கோட்டாபய - பெரமுன கடும் குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் மக்களின் ஆணையை பாதுகாக்கவில்லை என பொதுஜன பெரமுன கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடலில் பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏன் ரணிலை அதிபராக்கினோம்

தேசிய பாதுகாப்பு, தேசியம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு 69 இலட்சம் மக்கள் கோட்டபய ராஜபக்சவை தலைவராக தெரிவு செய்தார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் 69 இலட்சம் மக்களாணையை பாதுகாக்கவில்லை.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, 69 இலட்சம் மக்களாணை என்பன பலவீனமடையக் கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தோம்.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் நாட்டில் உண்ண உணவு இல்லாமல் எவரும் நெருக்கடிக்குள்ளாகவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நாட்டில் பாரிய நெருக்கடி

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் எமது அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு, மின்விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது.
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ராஜபக்சர்களிடமிருந்தும், பொதுஜன பெரமுனவில் இருந்தும் தனித்து செயற்படுவதாக மக்களுக்கு காண்பிக்கும் வகையில் தனித்து செயற்பட்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த விஜயதாஸ ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்கிரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோரை இறுதிக் கட்டத்தில் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.
பசில்,மகிந்த பதவி விலகல்

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பஷில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியில் இருந்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்தும் விலகுமாறு கோட்டாபய குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அவர்கள் பதவி விலகினார்கள். கடந்த ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள்.
நெருக்கடியான நிலையில் பஷில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள். ஆகவே சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை என்றார்.