கொள்கை இன்றிப் பயணிக்கும் கோட்டாபய அரசாங்கம்! அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
கோட்டாபய மகிந்த தலைமையிலான அரசாங்கம் கொள்கையின்றி செயற்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
தலாவாகலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பொது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பொருட்களின் விலை மாற்றமடைகின்றது, இன்று வாங்கும் விலைக்கு நாளை வாங்க முடியாது. இந்தக் கடையில் ஒர் விலை அந்தக் கடையில் ஓர் விலை. இதற்கு என்ன அர்த்தம்? கட்டுப்பாட்டு விலையினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
அரசாங்கம் தனது சந்தைகளை உருவாக்கி நியாயமான விலையில் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். ஒரு தொகை நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு இவ்வாறு அரசாங்கம் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த கூட்டுறவு சங்க முறையை அறிமுகம் செய்ய வேண்டும். ஏன் அரசாங்கத்திற்கு இதனை செய்ய முடியவில்லை. அரசாங்கத்திற்கு கொள்கையில்லை, சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் இந்த விடயம் காணப்படுகின்றது.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அரசாங்கத்திற்கு வர்த்தகர்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர். அந்த அழுத்தங்களுக்கு அரசாங்கம் ஒரு வகையில் இடமளித்துள்ளது என்றே தென்படுகின்றது” என்றார்.
