மிகப்பெரிய சூழ்ச்சிக்குள் கோட்டாபய ராஜபக்ச?
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் சிலர், பொதுமுடக்கத்தை அறிவிக்கும்படி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்த கடிதத்திற்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சியிருப்பதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் இவ்வாறான செயற்பாடு முதற்தடவையாக இன்று இடம்பெறவில்லை எனவும் உடனடியாக இது குறித்து விசாரிக்க வேண்டும் என அரச தலைவரை வலியுறுத்துவதாகவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த சாகர காரியவசம்,
கடந்த திங்கட்கிழமை அல்லது செவ்வாயில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் ஏகமனதாக நாட்டை மூடாமலிருப்பதற்காக எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவளித்தவர்கள் வெளியே சென்று நாட்டை மூடும்படி அரச தலைவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்குள் ஏதாவதொரு சூழ்ச்சி இடம்பெறுகின்றதா என்பது பற்றி அரச தலைலவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு முரணாக வெளியே சென்று அறிவிப்பு விடுவது மிகவும் பிழையான செயற்பாடு என்பதோடு இதற்கு முன்னரும் பல தடவை இவ்வாறு நடந்துள்ளது. கூட்டணியாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதிலுள்ளவர்கள் இவ்வாறு செயற்படுவதானது மிகவும் கீழ்த்தர செயற்பாடாகும்.
அரசாங்கத்திலுள்ள அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்திலிருந்து கொண்டு அவ்வாறு செயற்படுவதை அனுமதிக்க முடியாது.
அமைச்சரவையில் இருந்துகொண்டு நேரடியாக அரச தலைவர் கோட்டாபயவுக்கு எதனையும் கூறாமல், வெளியே வந்து அரச தலைவருக்கு அனுப்பிய கடிதம் அவருக்கு கிடைக்கும் முன்னரே ஊடகங்களுக்கு கிடைப்பதன் ஊடாக சூழ்ச்சி இருக்கின்றது.
எனவே அரச தலைவர் கோட்டாபய இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.