ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மைத்திரி தரப்பு அட்வைஸ்
இலங்கையில் தற்போதைய அரசாங்கம் மீது கிராம மட்டத்தில் உள்ள கடுமையான எதிர்விமர்சனங்கள் நிலவிவருவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் நேரடியாக எடுத்துக்கூறியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அரச தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.
ஆட்சிக்கு வந்த பின்னர் மைத்திரியுடன் அரச தலைவர் கோட்டாபய நடத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இந்தச் சந்திப்பின்போது, சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய 16 பேரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி ஓரங்கட்டப்படுவதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கே இன்றைய தினம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பு மிகவும் வெற்றியளித்ததாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.