யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்!
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.
அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (28.07.2026) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (29.07.2026 )இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
தொடரும் போராட்டம்
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் ”தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்“, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உடனே நிறுத்து“ போன்ற வாசகங்கள் ஏந்திய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நேற்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், கனகரட்ணம் சுகாஸ், காணி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |