நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு : காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர்
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் இந்த வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வளர்வடைந்த நாடுகளில் 10 .லட்சம் மக்களுக்கு 47 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 இலட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களம்
1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்கும் போது சட்டக் கட்டமைப்பு மேலும் வளர்ச்சியடையும்.

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு, பணியாளர்கள் நியமனம் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் போன்ற தொடர்புடைய துறைகளின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும்.
இந்த வயது அதிகரிப்பு மேன்முறையீட்டு அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டும் உரியது அல்ல; மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கும் பொதுவானது.
சர்வஜன வாக்கெடுப்பு
அத்துடன், இந்த வயதெல்லை நீடிப்பு நடவடிக்கைகளால் நீதித்துறை சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது. குறிப்பிட்ட ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படவில்லை, இது ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் சீரமைப்பதற்கான நடவடிக்கை.

அரசியலமைப்பின்படி நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. 2020 ஆம் ஆண்டிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது மக்களின் விருப்பம் கேட்கப்படவில்லை” என தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |