கோட்டாபய வீதிக்கு வந்தால் நடப்பது வேறு - கடுமையாக தூற்றிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்
தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காகவே அரச தலைவர் செயற்படுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரச தலைவர் திடீரென நாடாளுமன்றத்திற்கு வந்த போது இந்நாட்டின் உக்கிரமடையும் பிரச்சினைகள் குறித்து ஏதாவது நல்ல செய்தியுடன் வந்து அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அப்படி ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு வரவில்லை.
நான் இன்னும் இருக்கிறேன், நான் தலைமறைவாக இல்லை என்ற பாங்கையே காண்பிக்க முயற்சித்தார். வேலைத்திட்டமில்லாமல் வந்த அரச தலைவராகவே நாம் அவரை பார்க்கிறோம்.
அவருக்கு ஏற்படப்போகும் கதியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது
ஆனால் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அரச தலைவர் வந்தபோது மிகவும் கேவலமான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கிண்டல் மற்றும் கூச்சல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
பாதுகாப்பின்றி வீதியில் நடந்து சென்றால் அவருக்கு ஏற்படப்போகும் கதியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் இறங்கினால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. சோமாலியாவில் விழுந்த கோழிக்கு என்ன நடக்குமோ அதுதான் அரச தலைவர் வீதிக்கு வந்தால் நடக்கும்” என்றார்.
