கோட்டாபயவை நீக்க தீர்மானம்! எடுக்கப்பட்டது அதிரடி முடிவு
புதிய இணைப்பு
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்,அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அரச தலைவர் செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதை அடுத்து சபாநாயகர் இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அரச தலைவர் செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள போதிலும், அரச தலைவரின் இருப்பிடம் தெரியவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் அரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக அரச தலைவர் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்பொழுது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இன்று ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
