கோட்டாபயவின் பேச்சு சிறுபிள்ளைத் தனமானது - வேலுகுமார் சுட்டிக்காட்டு
சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக உள்ளதென்கிறார் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் (M. Velukumar).
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று (24) தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இராகலை நகரில் இடம்பெற்றது.
இராகலை - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் போராட்டம் ஆரம்பமாகி, ஊர்வலமாக இராகலை முருகன் ஆலயம் வரை சென்றடைந்து அங்கு ஆலயத்திற்கு முன்பாக கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் பேசிய அவர்,
அரச தலைவர் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பது எனது பொறுப்பல்ல என்று சொல்லுகிறார்.
அப்படியானால் நான் அவரைப் பார்த்து கேட்க விரும்புகின்றேன் - எதற்காக அரசி விலை, சீனி விலை உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு வர்த்தமானி அறிவித்தலை ஏன் வெளியிட்டீர்கள் என்று,
அப்படியானல் அது வெறும் கண் துடைப்பா ? மக்களை ஏமாற்றும் செயலா? அல்லது மக்கள் கூறினார்களா வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் படி.
எல்லாம் நீங்களே செய்து விட்டு, கடைசியாக சிறுபிள்ளைத் தனமாக இவ்வாறு கூறுவது எந்த வகையில் பொருத்தமானது என்று வேலுகுமார் கருத்து வெளியிட்டார்.