நெருக்கடியை சந்திக்கும் கோட்டாபய அரசாங்கம்! சுயதீனமாக இயங்கப்போகும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் போட்டியிட்டு தெரிவான 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படவுள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.
சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி, நிமல் லங்சா, கெவிந்து குமாரதுங்க, அனுரபிரியதர்ஷன யாபா மற்றும் பிரேமநாத் தொலவத்து உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில இராஜாங்க அமைச்சர்கள் இதில் அடங்குகின்றனர்.
அரச தலைவரின் கொள்கை திட்டமான சௌபாக்கிய நோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தாமை, ரூபாயை மிதக்கவிட்டு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் தாங்க முடியாத அளவில் அதிக விலையில் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்ய இடமளித்துள்ளமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் இவ்வாறு சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்காது, எஸ்.பி.திசாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸின் அரசியல் சபை தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கலந்துக்கொள்ளவில்லை.
ஜீவன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியின் மூலம் மலையக மக்களுக்கு எவ்வித சேவையும் செய்ய முடியவில்லை என்பதால், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கப்படவில்லை என அந்த கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் கே. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
