கோட்டாபயவை ஜனாதிபதியாக்கிய கட்சிகள் ஒன்றிணைவு!! வகுக்கப்படும் திட்டம்?
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பாடுபட்ட கட்சிகளே ஒன்றிணைந்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தை மற்றும் அரசாங்கத்திற்குள் தாம் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக குருணாகலில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், சிறிய கட்சிளின் தலைவர்களின் ஆறாவது கூட்டம் நடந்தது. முதலாவது கூட்டம் அமைச்சர் விமல் வீரவங்சவின் வீட்டில் நடந்தது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்ட போது, அந்த கூட்டம் நடந்தது.
நாங்கள் அதில் வெற்றி பெற்றோம். அதிபதி நிலைப்பாடு காரணமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பாடுபட்ட கட்சிகளே ஒன்றிணைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற இந்த கட்சிகள் உதவின. எனினும் அதற்கு பின்னர் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்து திருப்தியடைய முடியாது.
இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை நான் இந்த கதையை அனைத்து இடங்களிலும் கூறுவேன் என்றார்.