மட்டக்களப்பில் கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!
நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அகற்றப்பட்டதாக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மார்தட்டிக் கொண்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுவரை கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகமே நடைபெற்று வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் ஒரு ஜனநாயக ரீதியான நிர்வாகத்தை உருவாக்க முடியவில்லை.
தகுதியற்ற, கல்வி அறிவு இல்லாத, முன்னாள் ஆயுதக் குழுக்களின் கைகளில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு அபிவிருத்தி குறித்தும் ஜனநாயகம் குறித்தும் சர்வதேச நாடுகளை ஏமாற்றி வருகிறார்.
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து, கடத்தி கொலை செய்த முன்னாள் ஆயுதக் குழுக்களின் கைகளில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் சென்றிருக்கிறது.
ஆயுதங்களை காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தை தனது அராஜகத்தின் ஊடாக அடக்கி ஆளலாம் என சிந்தித்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை கையில் கொடுத்ததன் விளைவை மட்டக்களப்பு மாவட்டம் அனுபவித்து வருகிறது.
ஜனநாயக வழிக்கு திரும்ப முடியாது தவிக்கும் பிள்ளையான்!
தனது சிறு பராயம் வரை ஆயுதங்களினால் அனைத்தையும் கையாண்ட சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தனதுக்கு எதிராக மாவட்ட ரீதியாக எழும் விமர்சனங்களுக்கு பதில் வழங்க முடியாது திணறி வருகிறார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு தான் ஒரு தகுதி அற்ற தலைவர் என்பதை அவரது செயற்பாடுகள் பல முறை நிரூபித்திருக்கிறது.
அரச அதிகாரிகள் முதல் கொண்டு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் வரை தனது அதிகாரத்தை கொண்டு அடக்கி ஆளலாம் என அவர் நினைக்கிறார்.
சர்வதேச அளவில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகியாக பார்க்கப்படும் சிவனேசதுரை சந்திகாந்தன் மீது பல நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிள்ளையானுக்காக நீதிபதிகளை மாற்றிய கோட்டாபய அரசாங்கம்!
சிவனேசதுரை சந்திகாந்தனை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் சட்டமா அதிபர் உட்பட பல நீதிபதிகளை மாற்றியதாக அவருடன் இருந்த அவரது கட்சியின் செயலாளர் ஆர்சாத் மௌலானா சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
அது மட்டும் அல்ல சிவநேசதுரை சந்திரகாந்தன் மகிந்த ராஜபக்ச அரசு மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அரசுக்காக செய்த கொலை சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் குறித்த பல தகவல்களை ஆதாரங்களுடன் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி உள்ளார்.
அது மாத்திரமல்ல இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியிலும் கிழக்கில் செயற்படுகின்ற அந்த ஆயுதக் குழுக்களில் அங்கம்வகிக்கும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
எனவே வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்ல சிவனேசதுரை சந்திகாந்தனை தங்களது அரசில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ரீதியில் மிகப்பெரிய அழுத்தம் எழுவதற்கே வாய்ப்புகள் உள்ளன.
இலங்கையில் நிலையான அரசாங்கம் ஒன்று அமையுமாக இருந்தால் சிவனேசதுரை சந்திகாந்தனையும் அவருடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பாதாள ஆயுதக் குழுக்களும் எதிர்காலத்தில் கைது செய்யப்படலாம்.
ஜனநாயகத்தை இழந்து தவிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை ஆயுதக் குழுக்களின் ஆட்சியில் இருந்து மீட்டெடுக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைவருமே ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்தும் தனது எதிர்காலத்தை இழந்து ஆயுதக் குழுக்களின் சர்வாதிகார அராஜக போக்கினால் அழிந்து போய் விடும்.