தமிழர் காணிகளை சுவீகரிக்க முயன்ற அநுர அரசு - முறியடிக்கப்பட்ட சூழ்ச்சி
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அரசு மீளப்பெறுதல் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்த வெற்றி என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் (Northern Province) நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு காணி சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பாரதூர தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதக விளைவுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருக்கிறது.
இது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாரிய வெற்றியாகும்.
மேலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது என்று நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
