அரசுக்குள் வெடித்தது பூகம்பம் -தனிவழி போகுமா பங்காளி கட்சிகள்?
தங்கள் கருத்துக்களை அரசாங்கம் கேட்காததால் பங்காளி கட்சிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமொன்றுக்கு யுகதனவி மின் நிலையத்தை கையளிப்பது தொடர்பான விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு பங்காளி கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்தமையே இதற்கான உடனடி காரணம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதத்தில், யுகதனவி அனல்மின் நிலைய விவகாரத்தில் கூட்டாளிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்றும், இந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச அல்லது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் விவாதிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி மற்றும் எங்கள் ஜன பாலா கட்சி இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் இன்று (23) எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அசங்க நவரத்ன, டிரான் அலஸ் கெவிந்து குமாரதுங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க, ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்று அறியப்படுகிறது.