இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் : சுரேன் ராகவன் அறிவிப்பு
இலங்கையின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட இரு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, 2024 ஆம் ஆண்டில் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்படிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயர் கல்விக்காக மேலும் 210 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த வருடத்துக்கான திட்டம்
அடுத்த வருட இறுதிக்குள், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட இரு துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக நுண்கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதனூடாக இந்த வருட இறுதிக்குள் உரிய இலக்குகளை அடைய எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஆணைக்குழு
21 ஆவது நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டிலிருக்கும் நாம், உயர் கல்விக்கான தேசிய ஆணைக்குழு அல்லது அதிகார சபையொன்றை உருவாக்க எதிர்பார்த்திருப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனூடாக பல்வேறு பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் நிர்வாகச் செயற்பாடுகளை ஒரு இடத்திலிருந்து செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், பிரஜைகளை வலுவூட்டும் வகையில் 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைப் பெறும் மாணவர்களுக்கு அரசாங்கம் முதலீடு செய்யும் முழுத் தொகையையும் நேரடியாக புலைமைப்பரிசில் அடிப்படையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டமைப்பு
மேலும், பல்கலைக்கழக கட்டமைப்புக்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்க முடியுமென்பது தொடர்பில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
State Minister for Higher Education @SurenRaghavan announced a substantial allocation of funds for the #education sector in the year 2024, emphasizing the government’s commitment to enhancing the quality and accessibility of education in #SriLanka. (1/5) pic.twitter.com/YgXlljsGZk
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) November 3, 2023