வீடு வீடாக வெடிகுண்டுகளை கொண்டு வந்துள்ளது அரசாங்கம் - வெளிவந்த கடும் குற்றச்சாட்டு
இந்த அரசாங்கம் வீடு வீடாக வெடிகுண்டை கொண்டு வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இன்று நாட்டில் எழுந்துள்ள முக்கிய பிரச்சினையைப் பார்க்கும்போது, இந்த அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிலும் வெடிகுண்டைக் கொண்டு வந்துள்ளது.
நம் நாட்டில் 40% மக்கள் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மேல் மாகாணத்தில் எரிவாயு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் எரிவாயு சிலிண்டர் கிடைக்காதது மிகப்பெரிய பிரச்சனை. மிகவும் சிரமப்பட்டு எரிவாயு சிலிண்டரைப் பெற வரிசையில் நின்று பல எரிவாயு கடைகளுக்கு சென்று சிலிண்டரை எடுத்து வீட்டுக்குள் கொண்டு செ்னறால் இப்போது வெடிகுண்டு போல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. நேற்றும் ஏராளமான காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
பெரும்பாலான எரிவாயு சிலிண்டர்கள் அரசாங்க நிறுவனத்தால் விற்கப்படுகின்றன, அது லிட்ரோ ஆகும், அங்கு அரசாங்கம் நேரடியாகப் பொறுப்பாகும் இதற்கு என்ன தீர்வுகளைக் கூற வேண்டும். ” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.