எம்மால் முடிந்தது ஏன் அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
எதிர்க்கட்சி என்ற வகையில் நாமே சர்வதேச சமூகத்துடன் உறவுகளை கையாண்டு உதவி பெற முடியுமானால் அது ஏன் அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்துடன் நாடு வீழ்ந்துள்ள இடத்திலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவோம் என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம - ரன்மினிதென்ன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு உண்மையை அறிந்த மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனயே பணக்காரர்களுக்கு வரிச்சலுகை அளிப்பதை காரணமாகக் கொண்டு, அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய டொலர் தட்டுப்பாட்டுக்கு அதுவும் ஒரு காரணம்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியே பிரதான காரணம் என அரச தலைவரும் பிரதமரும் அண்மையில் கூறினர். அவ்வாறானால் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் தான் எல்லா தவறுகளையும் செய்துள்ளனர்.
தடுப்பூசி கொண்டு வர வேண்டாம் என்று ஆற்றில் முட்டிகளை வீசியவர்கள் நாங்கள் தான். அவர்கள் கூறுவது போல தடுப்பூசிக்கு பதிலாக பாணிகளை குடிக்கும் யோசனையை தாங்கள் தானே பிரபலப்படுத்தினோம், அரசாங்கம் பிரபலப்படுத்தவே இல்லையே!.
கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் நாங்கள் தானே சுரண்டினோம். அரசாங்கம் சுரண்டவே இல்லையே
எரிவாயு வரிசை, வெடிக்கும் எரிவாயு கொல்கலன்கள் மற்றும் அவசர அவசரமாக இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்தையும் அழித்தவர் சஜித் பிரேமதாச தானே, இந்த அரசாங்கம் அல்லவே.
சீனி, பூண்டு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து மோசடிகளையும் செய்துள்ளது சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் தானே, இந்த அரசாங்கம் அவ்வாறு ஒன்றையும் செய்யவே இல்லையே!.
இந்த அரசாங்கம் அனைத்தையும் சிறப்பாகவே செய்துள்ளது. இந்த எண்ணெய் பிரச்சினை, டொலர் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக பேசி தீர்வு காணலாம்.
எங்களின் திட்டத்திற்கு சீன அரசாங்கம் 200 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. கடன் அல்ல. நன்கொடை. நாங்கள் கடன் வாங்க தயாராக இல்லை.
எதிர்க்கட்சி என்ற வகையில், சர்வதேச சமூகத்துடன் உறவுகளை கையாண்டு உதவி பெற முடியுமானால், ஆட்சி அதிகாரத்துடன் நாடு வீழ்ந்துள்ள இடத்திலிருந்து நாட்டை மீள நாங்கள் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
