வரிப் பணம் இன்றி அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை
வரிப்பணம் இல்லாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை கொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இந்தப் புதிய முறையின்படி, வரி செலுத்துவதைத் தவிர்க்கும் தொழிலதிபர்கள் மற்றும் நபர்களைக் கண்டறிய முடியும் அவர் குறிப்பிட்டார்.
வருமான வரி சட்டம்
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"வரி செலுத்தாதவர்களை இனி எளிதில் அடையாளம் காண முடியும், அதற்காக வருமான வரி சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மற்றைய நாடுகளைப் போல, எதிர்காலத்தில், வரி ஏய்ப்பு செய்பவர்களை நேரடியாகக் கண்டுபிடிக்கும் முறைகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வரியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இது பாரிய சுமையாக இருக்கின்றது, இது தொடர்பில் அதிபருடனும் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எந்த விருப்பமும் இல்லாமல் வரியையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது, அதிபராலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இலங்கை இனிமேலும் கடன் வாங்கியவாறு பயணிக்க முடியாது, வரிகளை வசூலிக்காமல் அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? ஓய்வூதியம் எவ்வாறு வழங்குவது? மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
வரிப்பணம் இல்லாமல் அனைத்து சமூகநலப் பணிகளையும் அரசால் செய்ய முடியாது, அதுதான் யதார்த்தம்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |