கட்டுநாயக்காவில் அரசாங்க எம்பிக்கு வழங்கப்பட்ட காணி : வெடித்தது சர்ச்சை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விமான எரிபொருள் சேமிப்பு நிலையத்தை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் காணியொன்றை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜெட் எரிபொருள் விநியோகம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் பிரதான ஆதாரமாக இருப்பதாக தெரிவித்த அவர், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) அதன் ஏகபோக உரிமையை ஏன் இழக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வழங்கிய அனுமதி
விமானங்களுக்கு எரிபொருளை வழங்கும் நோக்கத்திற்காக 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டுநாயக்காவில் ஒரு அமைப்பு நடைமுறையில் இருக்கும்போது, ஜெட் எரிபொருளை வழங்குவதற்கும், Cannel (Private) Limited மற்றும் Fits Aviation நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
யார் அவர் : சூசகமாக வெளியான தகவல்
இதன்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை வெளியிடுமாறு சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha), தயாசிறியிடம் வலியுறுத்தினார்.பின்னர் எம்.பி ஜயசேகர, குறித்த எம்.பி ஒரு வர்த்தகர் என்றும் பொதுஜனபெரமுனவில் அதிபர் வேட்பாளராக எதிர்பார்க்கப்படுவதாகவும் சூசகமாக தெரிவித்தார்.
மாதாந்தம் கட்டுநாயக்க ஊடாக 13 மில்லியன் லீற்றர் விமான எரிபொருள் வழங்கப்படுவதாகவும், மத்தள விமான நிலையத்தின் ஊடாக 3 மில்லியன் லீற்றர்களும் இலங்கை விமானப்படைக்கு 400,000 லீற்றர்களும் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தெரிவித்தார்.
ஜெட் எரிபொருள் விநியோகத்தில் ஏகபோகம்
ஜெட் எரிபொருள் விநியோகத்தில் ஏகபோகம் உலகின் எந்த முக்கிய விமான நிலையங்களிலும் இல்லை என்றும் அனைத்து விமான நிலையங்களிலும் ஐந்து முதல் பத்து நிறுவனங்கள் ஜெட் எரிபொருளை வழங்குவதாகவும் ராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(D.V. Chanaka) இதன்போது கூறினார்.
விமான எரிபொருள் விநியோகத்தில் போட்டியை உருவாக்குவது, போட்டித்தன்மை வாய்ந்த விலையை உறுதி செய்வதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |