இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் - வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்
அரசாங்கம் தனது இயலாமையின் உச்சமாக “ஊடகத்துறையினர் மீது அழுத்தத்தினை பிரயோகிப்பதானது ஜனநாயகத்தின் மீதான சந்தேகத்தினை எழுப்புகின்றது” என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த U.L.மப்றுக் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு உட்பட சிறிலங்காவின் அனைத்துப் பகுதியிலும் ஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
தனது புலனாய்வாளர்களை வைத்து மக்களுக்காக குரல்கொடுத்து, தம்மாலான பணிகளைச் செய்துவரும் ஊடகத்துறையினரை உள ரீதியாக தாக்கத்திற்குள்ளாக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ள அரசாங்கம் அதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவைப் பயன்படுத்துகின்றது.
வவுனியா மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந. கபிலநாத் ஊடகப்பணிக்கு அப்பால், தமிழ் மக்களின் தொல்லியல் தொடர்பான தேடல்கொண்ட ஒருவராகவும் மக்களின் வறுமையை போக்க பல்வேறு உதவிகளை வழங்கி வருபவராகவே அறியப்பட்டவர்.
இவ்வாறு சமூக சிந்தனை கொண்ட ஊடகத்துறை சார்ந்தவர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சிறிலங்காவில் நடந்த ஊடகத்துறையினர் மீதானதும், ஊடக நிறுவனங்கள் மீதானதுமான தாக்குல்கள் மற்றும் அநீதிகளுக்கு இதுவரை பொறுப்புக் கூற முடியாத அரசு ஊடகத்துறையினரை மௌனிக்கச் செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.