மக்களின் உயிருடன் விளையாடும் அரசாங்கம்! ஆளும் தரப்பினரே ஏற்றுக் கொள்ளவில்லை - எதிர்க்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு
அரசாங்கத்திடம் டொலர் இன்மையே தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் காரணமாகும். இதே நிலைமை தொடருமானால் எரிபொருள் இறக்குமதியும் மட்டுப்படுத்தப்பட்டு மின்சார விநியோகத்தடையும் அடிக்கடி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் தரவுகளை ஆளுந்தரப்பினரே ஏற்க மறுக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
போலியான தகவல்களை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்தாமல் அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திடம் டொலர் இல்லாததன் காரணமாகவே சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதே நிலைமை தொடருமாயின் எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும். எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு அடிக்கடி மின்தடைக் ஏற்படக் கூடும்.
இதனால் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கூட தட்டுப்பாடு ஏற்படும். எரிவாயு விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கான நிர்ணய விலை 6500 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவின் அப்பலோ தனியார் மருத்துவமனையில் கூட பி.சி.ஆர். பரிசோதனைக்கு இலங்கை ரூபாவில் 2600 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது. இதே போன்று பங்களாதேஷில் 2300 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது.
இந்த விடயத்திலும் அரசாங்கம் மோசடி செய்கிறதா என்ற அச்சம் நிலவுகிறது. மக்களின் துன்பத்தை உணராத இந்த அரசாங்கம் கொவிட் விவகாரத்திலும் அவர்களின் உயிருடன் விளையாடுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.