கோட்டாபயவுடன் இன்று தீர்மானம்மிக்க பேச்சு - பங்காளி கட்சிகள் அறிவிப்பு
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலைய பங்குகளை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24) கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில(Udaya gamanpila) தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணியின் விசேட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.இந்தக் கூட்டத்திலேயே இந்த விடயம் பேசப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(23) ஐந்து மணிநேர கலந்துரையாடல் நடத்தினர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
"அதிக கேள்விகள், நீண்ட விவாதம். நாங்கள் எங்கள் நிலையை சரியாகக் கூறுவோம் ”என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க பங்காளிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து, கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்த உடன்பாடு குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்கள் நேற்று (23) கூடினர்.
ஜனநாயக இடது முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)தெரிவிக்கையில்,
"நாங்கள் மின் நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள். நாங்கள் ஒருமித்த கருத்துக்கு வந்தோம். எதுவும் கையெழுத்துப் போட்டு முடிக்கவில்லை. இவை அனைத்தும் அரசியல் அதிகாரத்தைப் பொறுத்தது எனத் தெரிவித்தார்.