வெட்கமின்றி வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் அரசாங்கம்! சரத் பொன்சேகா சீற்றம்
நாட்டு மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மறுபுறம் மக்களுக்கு வருமான இழப்பு என்பனவற்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களைப் பெறுவது பெரும் சவாலாக இருந்தாலும், அவை குறித்து அரசாங்கம் மௌனம் காக்கிறது. மக்கள் நலன் கருதி இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி நடப்பதாக தெரியவில்லை.
1977ஆம் ஆண்டு ஏற்பட்ட வரிசை யுகத்தை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வரிசை யுகத்தில் ஒரு திட்டம் இருந்தது. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் வரிசைகள் உருவாக்கப்படுவது போல் தெரிகிறது.
ஒரு பக்கம் அத்தியவசிய உணவுப் பொருட்கள், மறுபுறம் பால் மா, மறுபுறம் எரிவாயு, சிமெந்து என்று வரிசைகள் உருவாகிய வண்ணமுள்ளன. சரியான நேரத்தில் தோவையான இடத்திற்கு செல்ல முடியாது.
வீட்டு வேலை செய்ய முடியாது.குழந்தைகளை சரியான நேரத்தில் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரிசை யுகம் என்பது, ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இது எங்கு சென்று முடியும் என்பது யாருக்கும் தெரியாது. இதற்கிடையில் நாடு வக்குரோத்து அடைந்து வருவதை நாம் அறிவோம்.டொலர் இல்லாத பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
நம் நாட்டின் அபிமானமும், நற்பெயரும் பறிபோகும் வன்னம் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெட்கமின்றி நாட்டின் ஆட்சியாளர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.
தற்சமயம் இலங்கை கடனை செலுத்த முடியாத வங்குரோத்து நாடு என்று உலகமே பேசுகிறது. 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலாப நோக்கற்ற திட்டங்களினால் நாடு கடனில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தது என்பது இந்நாட்டின் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.
இவற்றையெல்லாம் எல்லையில்லாமல் செய்தவற்றின் விளைவுகளின் ஒரு பகுதியையே தவிர்க்க முடியாமல் மக்கள் அனுபவிப்பதைப் பார்க்கிறோம். டொலர்கள் இல்லாமல் கடனைச் செலுத்த வேண்டிய நிலைக்கு இந்த நாடு விழுந்து விட்டது.
இவர்களின் குடும்பக் கோவில்களை மக்கள் திட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையின் மூலம் உருவாகியுள்ள ஆபத்தான பிரச்சினை எண்ணெய் இழப்பாகும்.
இன்று ஏழெட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடுகள் உலகில் எங்கும் இல்லை.
எண்ணெய் பற்றாக்குறையால் நம் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு எண்ணெய் பற்றாக்குறையால் பலரின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
