அதிரடியாக பதவி நீக்கப்பட்ட ஆளுநர்கள் - ரணில் திடீர் முடிவு
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர்.
முன்னரே கசிந்த தகவல்
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
அத்தோடு, அதிபரின் பிரித்தானிய விஜயத்தின் பின்னர், ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதால், தன்னைப் பதவி விலகுமாறு, அதிபர் செயலகத்தின் குறித்த உயர் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தம்மை பதவியில் இருந்து விலகுமாறு அதிபர் தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தல்களும் தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்த நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க 3 மாகாணங்களுக்கான ஆளுநர்களை பதவி நீக்கம் செய்துள்ளார்.
