இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணிகள் - நேருக்கு நேர் மோதும் அரசு மற்றும் எதிர்க்கட்சி
பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.
“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நன்மை” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி தலைமையில் இன்று (12) மற்றுமொரு மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.
பொலன்னறுவை திம்பிரியங்கடுவ தீப உயன வளாகத்தில் இந்த மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேரணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்ற பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் கலந்துகொள்வதுடன், மேடையில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு பிரதான மாவட்டங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக பேரணிகளை நடத்தவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |