புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திலுள்ள குறைகள்: அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல் சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல் சட்டமூலம் (Protection of the State from Terrorism Bill - PSTB) தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளினால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இதனை தெரிவித்துள்ளார்.
குறைபாடுகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
சட்டமூலத்தில் ஏதேனும் குறிப்பிட்ட கவலைகள் அல்லது குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டால் அவற்றைச் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பழமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) அதன் ஜனநாயக விரோதத் தன்மை காரணமாக கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் PTA சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதம்
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் (Organised Crime) தொடர்ச்சியாக ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு ஒரு புதிய சட்டக் கட்டமைப்பு அவசியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

PTA சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டமானது மிகவும் ஜனநாயகமானதாகவும், திறமையானதாகவும் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைத் தத்துவங்களுக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுருத்தியுள்ளார்.
நாட்டின் இறையாண்மையையும் அரசையும் பாதுகாப்பதற்கு ஒரு சட்டம் நமக்குத் தேவை எனவும் இச் சட்டமூலம் குறித்து ஏதேனும் குறிப்பிட்ட கவலைகள் இருந்தால் அவற்றை நாங்கள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ளத் தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |