அரச அதிகாரிகளின் சம்பளம் - ஓய்வூதிய நெருக்கடி: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குவிந்த மனுக்கள்
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சுமார் 12,000 மனுக்கள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்கள், அமைச்சுக்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகளிடமிருந்து இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைக்கப்பெற்ற மனுக்களில் மிக அதிகமான முறையீடுகள் 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளிடமிருந்தே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி
இக் காலப்பகுதியில் நாட்டின் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் சம்பள வட்டாரங்களின் மறுசீரமைப்பு முரண்பாடுகள் காரணமாக இவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மனுக்களை அந்தந்த அரசுச் சேவைகள் (கல்விச் சேவை, நிர்வாகச் சேவை, சுகாதாரச் சேவை, காவல்துறை மற்றும் முப்படைச் சேவைகள்) மற்றும் பதவி நிலைகளுக்கு ஏற்பப் பிரத்யேகமாகப் பிரித்து விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட அனைத்துக் மனுக்களை முழுமையாக ஆராய்ந்த பின்னர், சம்பள முரண்பாடுகளைக் களைவதற்கும் நியாயமான ஓய்வூதியச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குமான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஆணைக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |