தலிபான்களின் அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்துள்ள பட்டதாரிகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பலர் கல்வி கற்று பட்டம் பெற்றுள்ள நிலையில், அந்த பட்டத்தால் எவருக்கும் எந்தவிதமான பயனும் இல்லை என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானில் தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் பாகி ஹக்கானி என்பவர் அங்குள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அதில்,
"கடந்த 20 வருடங்களாக தலிபான்கள் ஆட்சியில் இல்லாத நேரத்தில், நேட்டோ, அமெரிக்க பாதுகாப்பின் கீழ் ஆட்சி நடந்தது. அப்போதைய ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோரது ஆட்சியில் பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பலர் படித்துள்ளனர்.
அப்படி படித்து பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தவிதமான பயனும் இல்லை. இந்த நாட்டிற்கு தேசத்துக்கு பயன்படும் வகையில், அதாவது திறமை மற்றும் மதிப்பை உணர்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களையே பணியமர்த்த வேண்டும். இளைய சமுதாயத்தின் அறிவை ஆப்கானின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
இன்றுள்ள முதுகலை படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேட்டி பட்டதாரிகள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.