முடிவிலியாக தொடரும் புலமைப்பரிசில் சர்ச்சை: பரீட்சை திணைக்களம் வெளியிட்ட தகவல்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் கசிந்தமையால் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு இலவச மதிப்பெண்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயசுந்தர மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலவச மதிப்பெண் என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் எழுதிய மற்றும் எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மீண்டும் பரீட்சை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் கேள்விகள் வெளியானதாக எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் குழு, பரீட்சையை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து, புதிய அரசாங்கத்தால் 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து அறிக்கை கோரிய பின்னரும் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதேவேளை, வினாத்தாள் வெளியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
மேலும், கேள்விகளை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளரும் ஆசிரியரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |