மின்சார வாகனங்கள் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியுடன் கூடிய சிறப்பு இலக்க பலகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டரீதியாக செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்கத் தகடுகளை வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
இதனிடையே, பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2026 ஜூன் 10ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளும் இதில் அடங்குகின்றன.
மேலும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களுக்குரிய புதிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |