கொழும்பு தேவாலய கைக்குண்டு மீட்பு - மூடிய அறைக்குள் முக்கிய தகவல்கள் அம்பலம்
அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைத்ததாக கூறப்படும் சந்தேக நபரிடம் இருந்து ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் வாக்குமூலம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறையில் பதிவு செய்யப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்ட நபர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்திர ஜயசூரிய (Rajindra Jayasurirya )முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் சந்தேகநபர் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிரதம நீதவானிடம் தெரிவித்தனர்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிரதான நீதவான் கோரியதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் பிரதம நீதவான் சந்தேக நபரிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்யும்படி வற்புறுத்தப்பட்டாரா அல்லது விருப்பத்துடன் வாக்குமூலத்தை வழங்குகின்றாரா என கேள்வி எழுப்பியதோடு, விசாரணைகளின் போது பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு வாக்குமூலமும் அவருக்கு எதிராக சாட்சியமாக பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதம நீதவானிடம் பதிலளித்த சந்தேகநபர், தாம் விருப்பத்துடன் வாக்குமூலத்தை வழங்குவதாக தெரிவித்ததையடுத்து அவரிடமிருந்து இரகசிய வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
