வீடொன்றின் மீது குண்டு வீச்சு : பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
இரத்மாலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலினால் எவருக்கும் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.
ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இரத்மலானையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள குறித்த வீட்டின் மீது இன்று (05) அதிகாலை இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இரண்டு கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித காயமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |